Monday, February 06, 2006

1.பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய

1.பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த முடிவு நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய் - ஆதிநடு

பூமேவு செங்கமலம் என்பதை, செங்கமலப் பூமேவும் எனக் கொள்க.
புத்தேள் = இறைவன், தெய்வம்.
தேறு = தெளிதல்
அரிய = இயலாத, முடியாத
பாமேவு = செய்யுள்(பாட்டு) நடையில் பொருந்திய
பழமறை = பண்டைத் தமிழ் வேதம்
தே = சிவம்
நாதமும் = நாத தத்துவமும்
நாதாந்தம் = சிவதத்துவம்
முடிவு = தத்துவ ஞான எல்லை
நவை = குற்றம்
போதம் = உயிரறிவு

செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், ஆராய்ந்து அறிய முடியாத தெய்வத்தன்மை உடைய பாடல்கள் பொருந்திய பழமையான தமிழ் வேதமும் , சிவம் நிலைபெற்ற நாத தத்துவமும், அந்தத் தத்துவத்தின் முடிவாய் உள்ள அறிவும், குற்றமற்ற (உயிர்களின்) அறிவும், காணமுடியாத பேரறிவாய் நிற்கும் (பெருமானே!)

3 Comments:

ஞானவெட்டியான் said...

g.ragavan said...

ஐயா, நாதந்தம் என்றால் சிவதத்துவம் என்று சொல்லியிருக்கின்றீர்கள். வழக்கமாக நாதமும் விந்தும் தத்துவங்களாகச் சொல்லப்படும். இங்கு சிவதத்துவம் என்பது விந்துத் தத்துவமா?

8:56 PM

ஞானவெட்டியான் said...

அன்பு இராகவன்,

"நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே."

மேல் ஓதிய ஓசையாகிய நாதத்தினின்றும் ஒளியாகிய விந்து தோன்றும். ஓசை செவிக்கு எட்டும். ஒலி கண்ணுக்குப் புல(ன்)ப்படும். இது வரி வடிவம். நாத விந்துக்களாகிய இரு மெய்களிலிருந்தும் முறையே சிவன், சிவை(அம்மை) என்னும் மெய்கள் தோன்றும். சிவனிடம் இருப்பது பேரறிவு. சிவையிடம் இருப்பது பேராற்றல். பேரன்பு எனும் இச்சை என்றும் ஒன்றுபோல் நிற்கும்.

ஆக, நாதமாகிய ஒளியின் முடிவே நாதாந்தம். அதுவே, சிவ தத்துவம்.

7:03 AM

ஞானவெட்டியான் said...

g.ragavan said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

5:57 PM