Monday, January 15, 2007

12.வரவு நினைப்பு மறப்பும்

12.வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்
பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்துண்ணின்
றொருமலத்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு


வரவு = பிறப்பு
கடந்து = கடந்த, அப்பாற்பட்ட
உலவா = நீங்காத, வற்றாத
மருவுவித்து = சேர்ப்பித்து
கன்மமலத்தார் = ஆணவத்தோடு வினைப்பாசம் மாத்திரம் உடையவர்கள்
மின்னிடத்துப் பூத்த = மின் போன்ற உமை
இடத்து = இடப்புறத்தே
பூத்த = தோன்றிய
பொருப்பு = வெற்பு = மலை
மூத்த = பழமையாக உள்ள
மூத்த மலம் = ஆணவம்
கரும மலம் = வினை
கண் = ஞானம்
உண்ணின்று = புறத்தே தோன்றாமல் உயிரின் அறிவிலே விளங்கி
ஒரு மலத்தார் = ஆணவ மலத்தை மட்டும் உடையோர்
இன்பம் = பேரின்பம்

இறத்தல், பிறத்தல், நினைத்தல், மறத்தல், பகல், இரவு என்ற வேறுபாடுகளைக் கடந்ததாயுள்ள அழியாத பேரின்பத்தைப் பொருந்தச் செய்பவனே!

அறியாமைக்கும், வினைக்கும் காரணமான பாசம் உடையவர்களுக்குத் தாமரை போன்ற மூன்று கண்களும்(சூரிய, சந்திர, அக்கினி கலகளும்), நீண்ட சடையும் திருக்கையில் தரித்த வலிமை மிக்க தண்டும் மானும் உடையவனாய் இடப்புறத்தே உள்ள மின்னலோடு வெள்ளிமலைமேல் பவளமலை தங்கினாற்போல, பெரிய வெள்ளைக் காளைமேல், இடப்புறத்தே அம்மை உமையோடு சிவந்த தெய்வத் திருமேனியோடு எழுந்தருளி, கரும பாசக் கட்டை ஒழித்து ஞானத்தைக் கொடுத்து அருள்பவனே!

அறியாமைப் பாசம் உடையவர்களுக்கு அவர்கள் உள்ளத்திலே தோன்றி நின்று இன்பத்தைக் கொடுத்து, உடல் எடாத நிலை, உடல்நிலை, உடல் நீங்கிய நிலை ஆகிய மூன்று நிலைகளையும் கடக்கச் செய்து முத்தி பெற்றவர்களோடு சேர்த்து உயர்ந்த மேலான முத்தியை அடையச் செய்பவனே!

11.ஊழ்வி னையைப்போக்கி

11.ஊழ்வி னையைப்போக்கி யுடலறுபத் தெட்டுநிலம்
ஏழும்அத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக
ஆணவ மான படலங் கிழித்தறிவிற்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்

அடிஞானத் தாற்பொருளு மான்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்


ஊழ்வினை = முன்வினை
உடல் 68 = வெளியுடம்பில் உள்ள கருவிகள் 60, நுண்ணுடம்பிஉல் உள்ள கருவிகள் 8 ஆக 68.
நிலம் ஏழு = ஆறாதரமும், ஆகாயமும் ( சூக்கும ஆதரம் சேர்த்து ஏழாதாரம் என்போரும் உளர்)
ஆணவம் = அறியாமை விளவிக்கும் மலம்
படலம் = மறைக்கும் திரை, மறைப்பு நோய்
காணரிய = காணமுடியாத
மெய்ஞானக்கண் = பதி ஞான ஒளி
அடிஞானம் = இறையின் திருவடிகளை அறியும் அறிவால்
பொருள் = கடவுள்
ஆன்மா = உயிர்
கடியார் = காவல் பொருந்திய
முடியாது = அழியாது
தேக்கு = நிறைந்த
போக்கு = இறப்பு

உயிர்களின் வெளியுடம்பில் உள்ள கருவிகள் அறுபதையும், உள்ளுடம்பில் உள்ள கருவிகள் எட்டையும், மூலம் - மூலாதாரம், கொப்பூழ் -சுவாதிட்டானம், மேல்வயிறு - மணிபூரகம், நெஞ்சம் - அநாகதம், மிடறு - விசுத்தம்(விசுத்தி), புருவநடு - ஆக்ஞேயம், ஆகிய ஆறு ஆதாரங்களையும், அதற்குமேல் உள்ள சூனிய ஆகாயம் ஒன்றையும், மந்திர முதலிய ஆறு வழிகளையும் ஒழியும்படி செய்பவனே!

அறியாமைப் பாசமாகிய திரையை நீக்கி, உயிரின் அறிவால் காணமுடியாத கடவுளை அறியக்கூடிய ஞானக் கண்ணைக் கொடுத்து, இறைவனின் திருவடியையே (கண்களை) பற்றிக் கிடப்பதால் அறியக்கூடிய மெய்ப் பொருளையும், உயிர்த் தன்மையையும் அறிவித்து, தனது காவல் அமைந்த உலகு முழுவதும் காண்பித்து, எல்லை இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரின்பமான சுத்தமான அமிர்தமாய் உள்ள தமது தன்மையையுங் காட்டி, இறத்தல்.....

10.சத்தி நிபாதம் தருதற் கிருவினை

10.சத்தி நிபாதம் தருதற் கிருவினையும்
ஒத்துவருங் கால முளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - யுலவா
தறிவுக் கறிவாகி யவ்வறிவுக் கெட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக்
கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப் பேர்கொண்டு - திருநோக்கால்

சத்தி = அருள்
நிபாதம் = வீழ்ச்சி
இருவினை ஒத்தல் = பிறவிக்கு ஏதுவான நல்வினை, தீவினையில் ஒத்த வெறுப்பு
மலபரிபாகம் = மலம் நீங்கும் தருணம்
அலமருதல் = கவலையோடு அலைதல்
உலவாது = ஓயாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு
அவ்வறிவு = உயிரறிவு
பிறியா = நீங்கா
காசினிக்கே = உலகில்
குருபரன் = மேலான குரு
திருநோக்கு = அருள் பார்வை

திருவருள் விரைவாகப் பதிவதற்குரிய மிக மெது, மெது, தீவிரம், தீவிரமிகுதி எனும் 4 வகைப் பக்குவங்கள் ஏற்படுவதற்கு, நல்வினைப் பயன், தீவினைப் பயன் என்ற இரண்டிலும் ஒத்த வெறுப்பு வருகின்ற காலம் தோன்றி, பாசம் நழுவும் பருவத்தில், தவம் செய்த உயிர்கள் பல நாள் திருவருளைப் பெறுதற்கு வருந்துதலைப் பார்த்து, எப்போதும் அவ்வுயிர்களின் அறிவை விளக்கும் பேரறிவானனே! உயிர்களின் அறிவுக்கெட்டாது, முறையாக எவ்விடத்தும் பரந்து நிறைந்து இருப்பவனே! அந்த மேலான நிலை நின்று, பிரிந்து அருட்திரு மேனி கொண்டு இவ்வுலகில் தோன்றிக் குருபரன் என்னும் பெயரைத் தரித்துக் கொண்டு, திருவருட் பார்வையால், முன் செய்த வினைகளைத் தொலைப்பவனே!