Monday, January 15, 2007

12.வரவு நினைப்பு மறப்பும்

12.வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்
பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்துண்ணின்
றொருமலத்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு


வரவு = பிறப்பு
கடந்து = கடந்த, அப்பாற்பட்ட
உலவா = நீங்காத, வற்றாத
மருவுவித்து = சேர்ப்பித்து
கன்மமலத்தார் = ஆணவத்தோடு வினைப்பாசம் மாத்திரம் உடையவர்கள்
மின்னிடத்துப் பூத்த = மின் போன்ற உமை
இடத்து = இடப்புறத்தே
பூத்த = தோன்றிய
பொருப்பு = வெற்பு = மலை
மூத்த = பழமையாக உள்ள
மூத்த மலம் = ஆணவம்
கரும மலம் = வினை
கண் = ஞானம்
உண்ணின்று = புறத்தே தோன்றாமல் உயிரின் அறிவிலே விளங்கி
ஒரு மலத்தார் = ஆணவ மலத்தை மட்டும் உடையோர்
இன்பம் = பேரின்பம்

இறத்தல், பிறத்தல், நினைத்தல், மறத்தல், பகல், இரவு என்ற வேறுபாடுகளைக் கடந்ததாயுள்ள அழியாத பேரின்பத்தைப் பொருந்தச் செய்பவனே!

அறியாமைக்கும், வினைக்கும் காரணமான பாசம் உடையவர்களுக்குத் தாமரை போன்ற மூன்று கண்களும்(சூரிய, சந்திர, அக்கினி கலகளும்), நீண்ட சடையும் திருக்கையில் தரித்த வலிமை மிக்க தண்டும் மானும் உடையவனாய் இடப்புறத்தே உள்ள மின்னலோடு வெள்ளிமலைமேல் பவளமலை தங்கினாற்போல, பெரிய வெள்ளைக் காளைமேல், இடப்புறத்தே அம்மை உமையோடு சிவந்த தெய்வத் திருமேனியோடு எழுந்தருளி, கரும பாசக் கட்டை ஒழித்து ஞானத்தைக் கொடுத்து அருள்பவனே!

அறியாமைப் பாசம் உடையவர்களுக்கு அவர்கள் உள்ளத்திலே தோன்றி நின்று இன்பத்தைக் கொடுத்து, உடல் எடாத நிலை, உடல்நிலை, உடல் நீங்கிய நிலை ஆகிய மூன்று நிலைகளையும் கடக்கச் செய்து முத்தி பெற்றவர்களோடு சேர்த்து உயர்ந்த மேலான முத்தியை அடையச் செய்பவனே!

1 Comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in