Monday, January 15, 2007

10.சத்தி நிபாதம் தருதற் கிருவினை

10.சத்தி நிபாதம் தருதற் கிருவினையும்
ஒத்துவருங் கால முளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - யுலவா
தறிவுக் கறிவாகி யவ்வறிவுக் கெட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக்
கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப் பேர்கொண்டு - திருநோக்கால்

சத்தி = அருள்
நிபாதம் = வீழ்ச்சி
இருவினை ஒத்தல் = பிறவிக்கு ஏதுவான நல்வினை, தீவினையில் ஒத்த வெறுப்பு
மலபரிபாகம் = மலம் நீங்கும் தருணம்
அலமருதல் = கவலையோடு அலைதல்
உலவாது = ஓயாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு
அவ்வறிவு = உயிரறிவு
பிறியா = நீங்கா
காசினிக்கே = உலகில்
குருபரன் = மேலான குரு
திருநோக்கு = அருள் பார்வை

திருவருள் விரைவாகப் பதிவதற்குரிய மிக மெது, மெது, தீவிரம், தீவிரமிகுதி எனும் 4 வகைப் பக்குவங்கள் ஏற்படுவதற்கு, நல்வினைப் பயன், தீவினைப் பயன் என்ற இரண்டிலும் ஒத்த வெறுப்பு வருகின்ற காலம் தோன்றி, பாசம் நழுவும் பருவத்தில், தவம் செய்த உயிர்கள் பல நாள் திருவருளைப் பெறுதற்கு வருந்துதலைப் பார்த்து, எப்போதும் அவ்வுயிர்களின் அறிவை விளக்கும் பேரறிவானனே! உயிர்களின் அறிவுக்கெட்டாது, முறையாக எவ்விடத்தும் பரந்து நிறைந்து இருப்பவனே! அந்த மேலான நிலை நின்று, பிரிந்து அருட்திரு மேனி கொண்டு இவ்வுலகில் தோன்றிக் குருபரன் என்னும் பெயரைத் தரித்துக் கொண்டு, திருவருட் பார்வையால், முன் செய்த வினைகளைத் தொலைப்பவனே!

0 Comments: